sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

/

விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

10


UPDATED : ஜூன் 30, 2025 12:27 PM

ADDED : ஜூன் 30, 2025 02:13 AM

Google News

UPDATED : ஜூன் 30, 2025 12:27 PM ADDED : ஜூன் 30, 2025 02:13 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சிவகங்கை மாவட்டத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

நீதிபதி தலைமையில் விசாரணை தேவை


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகையை திருடியதாக வந்த புகாரை அடுத்து, அஜித்குமாரை திருபுவனம் போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது, காவலர் தாக்கியதில், அஜித்குமார் இறந்து விட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'ஜெய்பீம் படம் பார்த்தேன்; உள்ளம் உலுக்கியது' என, சினிமா விமர்சனம் எழுதிய, தி.மு.க., அரசின் முதல்வர் எங்கே இருக்கிறார்.

தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக எடுத்துக்கொள்ள கூடாது. தன் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை கூட, நிர்வகிக்க தெரியாத முதல்வருக்கு கண்டனம். அஜித்குமார் மரணம் குறித்து, முழு உண்மையை வெளிக்கொண்டு வர, மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்த வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும்.

காவல் துறையை சீர்திருத்துங்க


அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காணவேண்டிய காவல் துறை, விசாரணை என்ற பெயரில், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதே, காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம். காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து, போலி கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது, காவல் துறை வழியே மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.

காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என, மேடையில் பேசுவதோடு, தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர, காவல் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் பதவி விலக வேண்டும்


பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில், படுதோல்வி அடைந்துள்ள காவல் துறை, அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நான்கு ஆண்டுகளில், 28 பேர் போலீஸ் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோர், கொலை செய்யப்பட்ட போது, 'பேய் ஆட்சி செய்தால், பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை, இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

அவருக்கு மனசாட்சி இருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியதை போல், இப்போது பதவி விலக வேண்டும்.

தக்க நியாயம் பெற்று தர வேண்டும்


தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: விசாரணை என்ற பெயரில், இளைஞரை காவலர்கள் இரண்டு நாட்களாக அடித்து துன்புறுத்தியதால், அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது, 'லாக் அப்' மரணம் என்ற சந்தேகம் எழுகிறது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் நிலையம் சென்றாலே, உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. காவல் துறையின் அராஜக போக்கிற்கு, மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயத்தை முதல்வர் பெற்றுத்தர வேண்டும்.

மூடி மறைக்கும் வேலை


பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை மூடி மறைக்கும் வேலையில், காவல் துறையினரும், அந்தப் பகுதி தி.மு.க.,வினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. சிறு, சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளை, விசாரணை என்ற பெயரில் காவல் துறை கடுமையாக தாக்குவது, தி.மு.க., ஆட்சியில் அதிகரித்துள்ளது. அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் விடப்போவது இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us