தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்
தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்
ADDED : ஜன 30, 2025 01:01 AM

சென்னை:சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், அதிகாலை 2:00 மணியளவில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் சென்ற எட்டு வாலிபர்கள், மற்றொரு காரில் சென்ற பெண்களை, மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று, ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த 25ம் தேதி அதிகாலை, சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், கானத்துாரைச் சேர்ந்த சின்னி திலங்க், 26, என்ற பெண், தன் தோழியருடன், கோவளத்தில் இருந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டார்.
மின்னல் வேகம்
அப்போது, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில், எட்டு வாலிபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களின் நடவடிக்கை மீது சின்னி திலங்க் மற்றும் அவரின் தோழியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், காரை வேகமாக ஓட்டத் துவங்கி உள்ளனர்.
அப்போது, பின்னால் இரண்டு கார்களில் வந்த வாலிபர்கள், பெண்களின் காரை மின்னல் வேகத்தில் துரத்தினர்.
அதிகாலை, 2:00 மணியளவில், பெண்களின் கார், முட்டுக்காடு பாலம் அருகே சென்றது. அப்போது, பின்னால் துரத்தி வந்த வாலிபர்கள், சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு திடீரென சாலையை மறித்து, குறுக்காக காரை நிறுத்தினர்.
அதில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், பெண்களின் காரை நோக்கி ஓடி வந்தார். இதனால், சின்னி திலங்க் மற்றும் அவரின் தோழியர் பயத்தில் உறைந்தனர்.
ஆபாச பேச்சு
வெறித்தனமாக ஓடி வந்த அந்த வாலிபர், பெண்களின் கார் கண்ணாடியை வேகமாக தட்டி, ஆபாசமாக பேசியுள்ளார். அந்த வாலிபர் போதையில் இருந்ததால், அவரிடம் சிக்காமல் இருக்க, காரை வேகமாக பின்நோக்கிச் செல்ல முடிவு செய்தனர்.
காரில் இருந்த பெண் ஒருவர், மற்ற பெண்களை பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்பட சொல்லிக் கொடுத்தார்.
அதன்படி, காரில் இருந்த மற்ற பெண்களும் நடந்து கொண்டனர். அதற்குள், இரண்டு கார்களில் வந்த வாலிபர்கள், பெண்களை மீண்டும் துரத்த துவங்கினர்.
பாலியல் தொல்லைக்கு ஆளாகி விடுவோம் என பெண்கள் பதற்றத்தில், யாராவது வீட்டை திறந்து வைத்து இருந்தால், உதவி கேட்டு ஓடுவது எனவும் முடிவு செய்தனர்.
தவிப்பு
காரில் இருந்த பெண் ஒருவர், மற்ற தோழியரிடம் தன் உறவினருக்கு மொபைல் போனில் அழைக்குமாறு கூறுகிறார். அனைவரும் அந்த நேரத்தில் செய்வதறியாது தவித்தனர்.
இந்த காட்சிகள் அனைத்தையும், சின்னி திலங்க் தோழி ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். காரில் துரத்திய வாலிபர்கள், பெண்களிடம் தகராறு செய்து, பெரும் ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று இரவு, கானத்துார் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், வாலிபர்களை எச்சரித்து அனுப்பி விட்டதாகவும், அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் பேசியதாகவும், இதனால் புகார் வாபஸ் பெற வைக்கப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசாரின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்த, 'வீடியோ'க்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வெளியாகி, பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இடம், சூழல் பொறுத்துதான், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் நடக்கிறது. சாலையில் மின் விளக்கு எரியவில்லை என்றால், உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் அவசர பாதுகாப்பு எண்கள், 'சிசிடிவி' மற்றும் ரோந்து போலீசார் போன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எது நடந்தாலும், பெண்கள் துணிந்து வெளியே சொல்ல முன்வர வேண்டும்.
-வீ.லதா, 42,
கல்லுாரி விரிவுரையாளர், வேப்பம்பட்டு.
பொதுவாக இரவு 10:00 மணிக்கு மேல், முக்கிய சாலைகளில், முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினால், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 'டாஸ்மாக்' கடை உள்ளது. அங்கு, இரவு 8:00 மணிக்கு மேல் போதை ஆசாமிகள் கூட்டமாக நிற்கின்றனர். இதனால், அங்கு போலீசாரை நிறுத்தினால், பெண்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.
- மீனா, செம்பாக்கம்.
சமூக ஆர்வலர், ஆவடி