மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு ஒப்பந்தம் முடிவு செய்ய அதிகாரம்
மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு ஒப்பந்தம் முடிவு செய்ய அதிகாரம்
ADDED : ஜூலை 22, 2024 05:52 PM
ராமநாதபுரம்: ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு கூடுதலாக, 25 லட்சம் ரூபாய் வரை ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை புதிய அரசாணையில் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை அளவீடு செய்யும் அதிகாரம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர்களுக்கு பராமரிப்பு பணிகளுக்கு 50,000த்தில் இருந்து 1 லட்சம் ரூபாயாக தொழில் நுட்ப அனுமதி வழங்கும் அதிகாரம் உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பீட்டு உச்சவரம்பு, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், மற்றும் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் அதிகாரம் மண்டல துணை பி.டி.ஓ.,களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஊராட்சியில் கோரப்படும் ஒப்பந்த புள்ளிகளில் தலைவர் மற்றும் உதவி பொறியாளர்களே குறைந்த ஒப்பந்த புள்ளியை மதிப்பீடு செய்து முடிவு செய்து வந்தனர். புதிய அரசாணையின் முக்கிய அம்சமாக ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் அதிகாரம் மண்டல துணை பி.டி.ஓ.,க்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊராட்சி தலைவர்களால் கோரப்படும் ஒப்பந்தங்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வரப்பெறும் ஒப்பந்த புள்ளிகளை, 25 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு செய்து குறைந்த விலைப்புள்ளியை அங்கீகரிக்கும் அலுவலர்களாக மண்டல துணை பி.டி.ஓ.,விற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்களால் கோரப்படும் ஒப்பந்த புள்ளிகளில் குறைந்தது 5 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு செய்து அங்கீகரிக்கும் அலுவலர்களாக மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

