ADDED : செப் 07, 2011 10:35 PM
டமாஸ்கஸ்: சிரியாவில் மக்கள் மீதான அரசு வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு நேற்று செல்ல இருந்த அரபு லீக் பொதுச் செயலரின் வருகையைத் தள்ளிப் போடும் படி, அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, அடுத்த வாரம் அரபு லீக் கூடி ஆலோசிக்க உள்ளது. சிரியாவில் ஹோம்ஸ் நகரில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். தொலைபேசி, மொபைல்போன் மற்றும் இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் பீரங்கிகள் முற்றுகையிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரபு லீக், அதன் பொதுச் செயலர் நபீல் அல் அரபி தலைமையில் ஒரு குழுவை சிரியாவுக்கு அனுப்ப முடிவு செய்தது. மொத்தம் 13 பரிந்துரைகள் அடங்கிய ஓர் அறிக்கையை அதிபர் அசாத்திடம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அரபு லீக்கின் முடிவின் படி, நேற்று, பொதுச் செயலர் அரபி, சிரியாவுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்து சிரியா, அரபு லீக்குக்கு விடுத்த கடிதம் ஒன்றில், நாட்டில் அசாதாரணமான சூழல்கள் நிலவுவதால், அரபியின் வருகையைத் தள்ளிப் போடும் படி கேட்டுக் கொண்டது. இதையடுத்து அரபியின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.