பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க இயந்திரம் நிறுவிய ஜெர்மனி நகரம்
பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க இயந்திரம் நிறுவிய ஜெர்மனி நகரம்
ADDED : செப் 04, 2011 01:29 AM

பெர்லின்:ஜெர்மனியில் முதன் முதலாக, ஒரு நகரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், வரி கட்டுவதற்காக, இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒன்றிணைத்து அமைப்புகள் உருவாக்குதல், அந்தத் தொழிலை முறைப்படுத்தல் போன்றவை, ஜெர்மனியில் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், 'பான்' என்ற நகரம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வரி கட்டுவதற்காக, ஒரு இயந்திரத்தை முதன் முதலாக நிறுவியுள்ளது. ஜெர்மனியில், பாலியல் தொழிலுக்கு வரி வசூலிப்பு உண்டு என்றாலும், பான் நகரம் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது.
ஜெர்மனியின் பிற நகரங்களைப் போல் அல்லாமல், பான் நகரம், தெருவிலேயே பாலியல் தொழில் நடப்பதற்கு புகழ் பெற்றது. அந்நகர நிர்வாகம், அப்பகுதியை பாதுகாப்பதற்காக ஆண்டுக்கு, ஒரு லட்சத்து 16 ஆயிரம் டாலர் செலவு செய்கிறது. பாதுகாப்பில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.பான் நகரில் மட்டும், 200 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 20 பேர், தினசரி தெருக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். பான் நகரில் தெரு பாலியல் தொழிலுக்காக, ஜெர்மனி மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்வதில், பல குளறுபடிகள் நடக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக, நம்மூர் ரயில்வே நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள டிக்கெட் தரும் இயந்திரத்தைப் போல, ஒரு இயந்திரம் பான் நகரில் நிறுவப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளிகள், இந்த இயந்திரத்தில் தினசரி இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வரி செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.டிக்கெட் இல்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய வழிமுறை மூலம், ஆண்டுக்கு இர ண்டு லட்சத்து 84 ஆயிரம் டாலர் வருமானம் கிடைக்கும் என, அந்நகர நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.அதோடு, கார்களில் வருபவர்கள் அவற்றை நிறுத்தவும், தெருவிலேயே பாலியல் தொழிலாளியும் வாடிக்கையாளரும் 'ஒதுங்கவும்' வசதியான மரத் தடுப்புகளையும் நகர நிர்வாகம் உருவாக்கியுள்ளது.