ஒரு வாரத்தில் என்ன வேலை செய்தீர்கள்: அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு பதிலளிக்க 48 மணி நேரம் கெடு
ஒரு வாரத்தில் என்ன வேலை செய்தீர்கள்: அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு பதிலளிக்க 48 மணி நேரம் கெடு
ADDED : பிப் 24, 2025 04:14 AM

நியூயார்க்: கடந்த ஒரு வாரத்தில் என்ன வேலை செய்தீர்கள் என்பதை, 48 மணி நேரத்துக்குள் தெரிவிக்க, அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு இ - மெயில் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பாவிட்டால், ராஜினாமா செய்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருப்பது, ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.
ஏற்கனவே, பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளிலும் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பதிவில், எலான் மஸ்க் கூறியுள்ளதாவது:
அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவின்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், இ - மெயில் ஒன்று அனுப்பப்படும். அது கிடைத்த, 48 மணி நேரத்துக்குள் பதில் அனுப்ப வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் நீங்கள் என்னென்ன வேலை செய்தீர்கள் என்பது குறித்து, ஐந்து புல்லட் பாயின்ட்களாக தெரிவிக்கவும்.
அவ்வாறு, அந்த இ - மெயிலுக்கு பதில் அனுப்பாவிட்டால், நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்ததாகக் கருதப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு மூன்று வரிகளில் இ - மெயில் அனுப்பப்பட்டு, இன்று இரவு 11:59 மணிக்குள் பதிலளிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதிலளிக்காதவர்கள் வேலை பறிக்கப்படும் என்பது குறித்து அதில் கூறப்படவில்லை.
இதற்கிடையே, இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில துறைகள், இந்த இ - மெயிலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குநராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், தங்கள் அமைப்பின் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், 'எலான் மஸ்கின் எந்த உத்தரவையும் பொருட்படுத்த வேண்டாம்' என, தெரிவித்துஉள்ளார்.

