பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு அல் குவைதாவினர் 14 பேர் கைது
பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு அல் குவைதாவினர் 14 பேர் கைது
ADDED : ஆக 23, 2024 02:07 AM
புதுடில்லி, நம் நாட்டில், அல் குவைதா பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 14 பேரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட அல் குவைதா பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட சிலர், நம் நாட்டில் பல பயங்கரவாத சம்பவங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வாயிலாக டில்லி போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.
உஷார் நிலை
இதையடுத்து, தலைநகர் டில்லி மட்டுமின்றி நாடு முழுதும் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் அல் குவைதா அமைப்பால் ஈர்க்கப்பட்ட சில குழுவினர் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் கிடைத்தது. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ராஜஸ்தானின் பிவாடியில், ஒரு குழுவினர் தீவிர ஆயுத பயிற்சி மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாசவேலை நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
ஆயுத பயிற்சி
இதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்திலும், இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

