பள்ளி விடுதியில் தீ விபத்து கென்யாவில் 17 மாணவர்கள் பலி
பள்ளி விடுதியில் தீ விபத்து கென்யாவில் 17 மாணவர்கள் பலி
ADDED : செப் 07, 2024 12:57 AM

நைரோபி, கென்யாவில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 17 மாணவர்கள் உடல் கருகி பலியாகினர்; 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், நெய்ரி மாகாணத்தில் எண்டார்ஷா நகரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், அவர்களுக்கான தங்கும் விடுதியும் பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ளது.
அந்த விடுதியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விடுதி முழுதும் மரக்கட்டைகளால் கட்டமைக்கப்பட்டதால், தீ மளமளவென பரவியது. பதறியடித்தபடி மாணவர்கள் வெளியேறினர்.
சிலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதன்பின், உள்ளே சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 17 மாணவர்கள் தீயில் கருகி பலியானது தெரியவந்தது. இதுதவிர, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், பலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.