பாலத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து 45 பேர் பரிதாப பலி
பாலத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து 45 பேர் பரிதாப பலி
ADDED : மார் 29, 2024 11:40 PM

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்கு ஆட்களை ஏற்றிச் சென்றபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில், 45 பயணியர் உயிரிழந்தனர். இதில், 8 வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
தென் ஆப்ரிக்காவின் வடபகுதியில் உள்ள லிம்போ மாகாணத்தில் ஈஸ்டர் பண்டிகைக்காக, ஏராளமான பயணியருடன் பஸ் மோரியா நகருக்கு சென்றது.
மலைப்பகுதியில் உள்ள மமத்லகலா பாலம் மீது சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 164 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது பஸ் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இருந்த 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 8 வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 'அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து மோரியா நகருக்கு ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்காக பயணியரை ஏற்றி வந்தபோது, பஸ் விபத்தில் சிக்கியது' என தெரிவித்தனர்.

