அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ இந்தியர்கள் உட்பட 49 பேர் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ இந்தியர்கள் உட்பட 49 பேர் பலி
UPDATED : ஜூன் 13, 2024 10:09 AM
ADDED : ஜூன் 13, 2024 12:58 AM

துபாய்:குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது மேல் தளங்களுக்கும் வேகமாக பரவியதை அடுத்து, கட்டடம் முழுதும் தீ பற்றியது. இதையடுத்து, அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. அதிகாலை என்பதால் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் மூச்சுத் திணறி பலியாகினர். தீ விபத்தில் இருந்து தப்ப முயன்ற பலர், மாடியில் இருந்து கீழே குதித்ததால் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் தமிழர்கள் என்றும் இப்போதைக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீ விபத்தில் 20 - 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்பட்டு வருகின்றன. மீட்பு பணியில் ஈடுபட்ட ஐந்து தீயணைப்பு வீரர்களும் இந்த விபத்தில் காயமடைந்தனர்' என கூறப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இந்திய துாதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக விபரங்களை அறிய +965 - 65505246 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட அந்நாட்டிற்கான இந்திய துாதர் ஆதர்ஷ் சுவைகா, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்ட குவைத் நாட்டு துணை பிரதமர் ஷேக் பகத் யூசுப் சவுத் அல் ஷாபா, ''ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விதிகளை மீறுவதே இதுபோன்ற விபத்துக்கு காரணம்.
தீ விபத்து நடந்த கட்டட உரிமையாளர் மீதும், தொழிலாளர்களை அங்கு தங்க வைத்த நிறுவன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோல், வேறெங்கும் விதிமீறல் நடந்துள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய துாதரக அதிகாரிகள் வாயிலாக உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'குவைத் தீ விபத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவி செய்யப்படும்' என கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கான உதவிகளை மேற்பார்வையிடவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக தாயகம் அனுப்புவதை உறுதிப்படுத்தவும், வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் விரைந்துள்ளார்.
இதற்கிடையே, தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் விபரங்களையும், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்களை தருமாறு இந்திய துாதரகத்தை தமிழக அரசின் அயலக தமிழர் நலத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விபரங்களை இந்தியாவுக்குள் அறிய 911 - 80030 93793 என்ற எண்ணையும், வெளிநாடாக இருந்தால் 91 - 80690 09900, 80690 09901 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கேரளாவைச் சேர்ந்தவர்களின் உடல்களை இந்தியா எடுத்து வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.