ரபா பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சில் இழுபறி
ரபா பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சில் இழுபறி
ADDED : மே 08, 2024 02:31 AM

கெய்ரோ :போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், எகிப்துஉடனான ரபா எல்லையில் உள்ள காசா பகுதியின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் பீரங்கிப்படை நேற்று கைப்பற்றியது.
மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக் கொண்டு வர தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. கெய்ரோவில் இரு தினங்களுக்கு முன் நடந்த கடைசி பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
போர் நிறுத்தப்பேச்சு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், காசாவில் உள்ள ரபா எல்லைப் பகுதியை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்தன. அங்கு ஹமாஸ் படையினர் இருப்பதாக சந்தேகிக்கும் பகுதிகளை குறிவைத்து குண்டு வீசப்பட்டு வருகிறது. இதில், ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரபாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் படைகள் தயாராக உள்ளன.
முன்னதாக பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது. எகிப்திலிருந்து பாலஸ்தீனத்துக்குள் செல்வதற்கான ஒரே வழி ரபா எல்லை பகுதி தான், தற்போது அந்த பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இருதரப்பும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்துவதால் போர் நிறுத்த பேச்சில் முடிவு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

