ரத்தம் உறையும் என கூறிய 'ஆஸ்ட்ராஜெனகா' கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற்றது
ரத்தம் உறையும் என கூறிய 'ஆஸ்ட்ராஜெனகா' கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற்றது
ADDED : மே 09, 2024 12:51 AM

லண்டன், வர்த்தக ரீதியான காரணங்களால் சர்வதேச சந்தையில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான 'ஆஸ்ட்ராஜெனகா' தெரிவித்துஉள்ளது.
கடந்த 2019ல், இந்தியா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏற்றுமதி
ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து, 'வக்ஸ்செவ்ரியா' என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது.
மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம், அந்த உரிமத்தை பெற்று, வாக்ஸ்செவ்ரியா தடுப்பூசியை, 'கோவிஷீல்டு' என்ற பெயரில் நம் நாட்டில் தயாரித்து வினியோகித்தது. இது, பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் பக்கவிளைவுகள் காரணமாக உயிரிழந்ததாக, லண்டன் நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
விசாரணையில், ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து அந்த தடுப்பூசியை தயாரித்த ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம், நீதிமன்றத்தில் அதன் பாதிப்பு குறித்து ஒப்புக்கொண்டது.
இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வெகு சிலருக்கு, டி.டி.எஸ்., எனப்படும் ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டணு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த அறிவிப்பு, உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசி திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது. புதிய வகை கொரோனா திரிபுகளை சமாளிக்கும் வகையிலான புதிய மருந்துகள் வந்துவிட்டன.
இனிமேல் பழைய தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது; பயன்படுத்தவும் முடியாது. முதல்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த மருந்து திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது. அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான முடிவுக்கும், நீதிமன்ற வழக்குக்கும் தொடர்பில்லை' என கூறியுள்ள அந்த நிறுவனம், இது முற்றிலும் தற்செயலானது என தெரிவித்துஉள்ளது.
கோவிஷீல்டு
ஐரோப்பிய நாடுகளில் வாக்ஸ்செவ்ரியா தடுப்பூசி திரும்பப் பெறப்பட்ட நிலையில், நம் நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியும் திரும்ப பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு, கொரோனா தடுப்பூசிகளை வாங்கவில்லை; எதிர்காலத்தில் மேலும் தடுப்பூசிகளை வாங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை' என தெரிவித்தனர்.
இது தொடர்பாக 'சீரம் இந்தியா' நிறுவனம் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.