தொடர் வன்முறை நீடித்தால் ஆபத்து வங்கதேச ராணுவ தளபதி எச்சரிக்கை
தொடர் வன்முறை நீடித்தால் ஆபத்து வங்கதேச ராணுவ தளபதி எச்சரிக்கை
ADDED : பிப் 28, 2025 12:41 AM

டாக்கா, “கடந்த ஏழு மாதங்களாக நீடிக்கும் வன்முறையால், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது; இந்த நிலை தொடர்ந்தால் ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,” என, வங்கதேச ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அங்குள்ள மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு ஜூலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள், போலீசார், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர்.
மோசமான நிலை
நாடு முழுதும் ஏற்பட்ட கலவரத்திற்கு, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, கடந்த ஆக., 5ல் நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால ஆட்சி அமைந்துள்ளது. இருப்பினும், அங்கு ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், வங்கதேச ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியதாவது:
நம் நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இப்போது நாம் காணும் இந்த அராஜக போக்கு, நாமே உருவாக்கிக் கொண்டது தான். நாட்டில் உள்ள போலீசார் திறனற்ற நிலையில் உள்ளனர்.
போலீசாரில் பெரும்பாலானோர் வழக்குகளில் சிக்கியுள்ளதால், இளைய அதிகாரி முதல் மூத்த அதிகாரி வரை அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப் படைக்கான கடமை அதிகரித்துள்ளது.
உடனடியாக, மக்கள் ஒற்றுமையுடனும், பாதுகாப்பு அமைப்புகள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும்.
மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கருத்து வேறுபாட்டை களைய முடியாமல் போனால், உங்களுக்கு இடையே நடக்கும் சண்டை மேலும் சில மாதங்கள் நீடிக்கும்.
குற்றச்சாட்டு
இதனால், ஒருவரையொருவர் காயப்படுத்துவதும், கொன்று குவிப்பதும் அதிகரிக்கும். இதனால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
கடந்த ஆறேழு மாதங்களாக அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறேன். கட்டாயமாக காணாமல் போதல், கொலை மற்றும் குடிமக்களைச் சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் ஏராளமாக எழுந்துள்ளன.
இதுபோன்ற விஷயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நாமும் அதே சுழற்சியில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.