எங்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள்: இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை
எங்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள்: இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை
UPDATED : பிப் 10, 2025 01:51 AM
ADDED : பிப் 10, 2025 01:44 AM

டாக்கா : 'ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து, இந்தியா தெரிவித்துள்ள கருத்துக்கள் தேவையற்றது' என, வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 5ம் தேதி, ஆன்லைன் வாயிலாக நேரலையில் பேசிய ஷேக் ஹசீனா, இடைக்கால அரசை கடுமையாக விமர்சித்தார்.
இது வங்கதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வங்கதேசத்தை தோற்றுவித்தவரும், ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பூர்வீக இல்லம், டாக்காவில் உள்ளது. இங்கிருந்தபடி தான் வங்கதேச விடுதலை போராட்டத்தில் அவர் வியூகங்களை வகுத்தார். அது நினைவு இல்லமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஹசீனாவின் பேச்சை தொடர்ந்து ஆத்திரமடைந்த வன்முறையாளர்கள் அந்த இல்லத்தை சூறையாடினர். நினைவு இல்லத்தை அடித்து நொறுக்கியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
![]() |
'வங்கதேச சுதந்திர போராட்டத்தை மதித்து, நாட்டின் அடையாளத்தை போற்றும் அனைவருக்கும் அந்த இல்லத்தின் மதிப்பு தெரியும்' என, நம் வெளியுறவுத்துறை தெரிவித்தது. இந்த கருத்துக்கு வங்கதேச வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: முஜிபுர் ரஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கருத்து எதிர்பாராதது, தேவையற்றது. எந்த நாட்டின் உள் விவகாரங்களிலும் வங்கதேசம் கருத்து தெரிவிப்பதில்லை. அதையே மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.