அசதியில் கொஞ்சம் துாங்கிட்டேன் விவாதத்தில் சொதப்பியது குறித்து பைடன்
அசதியில் கொஞ்சம் துாங்கிட்டேன் விவாதத்தில் சொதப்பியது குறித்து பைடன்
ADDED : ஜூலை 04, 2024 01:25 AM

வாஷிங்டன், ''அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையேயான விவாதத்தின்போது நடுவில் கொஞ்சம் துாங்கிவிட்டேன்; அதனால் தான் வலுவாக பேச முடியவில்லை,'' என, அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
எதிர்ப்பு குரல்
அதிபர் வேட்பாளர்கள் தங்களுடைய கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் விவாதம் செய்வர். இந்த விவாதத்தின் அடிப்படையிலேயே யாருக்கு ஓட்டு போடலாம் என மக்கள் முடிவு செய்வர்.
சமீபத்தில் அட்லாண்டாவில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், டிரம்பின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். இதையடுத்து, ஜோ பைடனை மாற்ற வேண்டும் என, அவருடைய ஜனநாயக கட்சியிலேயே பலர் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர். வேறொரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு தற்போது 40 சதவீத வாக்காளர்களின் ஆதரவு உள்ளதாக அவருடைய கட்சியினர் தெரிவிக்கின்றனர். டிரம்புக்கும் 40 சதவீத ஆதரவு உள்ளது. அதனால், பைடனுக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என, அவருடைய ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
உடல் சோர்வு
இந்நிலையில், விர்ஜினியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஜோ பைடன் பேசியதாவது:
அட்லாண்டாவில் நடந்த விவாதத்துக்கு முன், நான் பல நாடுகளுக்கு பயணம் செய்தேன். கிட்டத்தட்ட, 100 வெவ்வேறு மண்டலம் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தேன். இதனால், உடல் சோர்வு இருந்தது.
விவாதத்தின்போது, நடுவில் அசதியில் கொஞ்சம் துாங்கிவிட்டேன். இதனால், விவாதத்தில் சரியாக பங்கேற்க முடியவில்லை. அடுத்து வரும் விவாதங்களில் என் வாதத் திறமையை காட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மற்றொரு கருத்துக் கணிப்பில், 45 சதவீதம் ஜனநாயக கட்சியினர், ஜோ பைடன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என, தெரிவித்து உள்ளனர்.