பள்ளியில் சிறுவன் துப்பாக்கி சூடு: ஒரு மாணவர் பலி; 2 பேர் படுகாயம்
பள்ளியில் சிறுவன் துப்பாக்கி சூடு: ஒரு மாணவர் பலி; 2 பேர் படுகாயம்
ADDED : ஏப் 03, 2024 10:44 AM

ஹெல்சிங்கி : பின்லாந்து நாட்டில், பள்ளியில் 12 வயது சிறுவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், சக மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியின் புறநகர் பகுதியான வன்டாவில் விர்டோலா பகுதியில் பள்ளி ஒன்று உள்ளது. இதில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று காலை பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில், 12 வயது மாணவர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.
இதில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், பள்ளியை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிய மாணவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த மூன்று மாணவர்களும், 12 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்; மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவர் வைத்திருந்தது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி என்றும், அது அந்த மாணவரின் உறவினருக்கு சொந்தமானது என தெரிவித்தனர்.
அதை நேற்று ஸ்கூல் பேக்கில் எடுத்து வந்த மாணவர் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

