சீனா, வடகொரியா தொல்லை தாங்க முடியலை; ராணுவத்தை வலுப்படுத்துகிறது ஜப்பான்
சீனா, வடகொரியா தொல்லை தாங்க முடியலை; ராணுவத்தை வலுப்படுத்துகிறது ஜப்பான்
ADDED : ஆக 18, 2024 08:01 AM

டோக்கியோ: என்ன தான் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவி வந்தாலும், தனக்கென்று ராணுவ வலிமை இருந்தால் தான் சீனா, வடகொரியா போன்ற நாடுகளை சமாளிக்க முடியும் என்று எண்ணி, ராணுவத்தை பலப்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா உதவி
சீனா, வடகொரியா போன்ற அண்டை நாடுகளால் ஜப்பானுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஜப்பான் தன் ராணுவ வலிமையை அதிகரிக்கக்கூடாது; அதன் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கிறது. அதன்படி அமெரிக்க ராணுவ தளம், ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ளது. என்ன தான் அமெரிக்கா பாதுகாப்புக்கு இருந்தாலும், சீனா, வடகொரியா போன்ற நாடுகள் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக, தன் பலத்தை, நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
புதிய யுக்தி
ராணுவத்தில் இருக்கும் ஆள்பற்றாக்குறை மற்றும் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க, 'கேம் சேன்ஜிங்' தொழில்நுட்பங்களை புகுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதற்காக, அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தயாரிக்கும் புதிய ஆராய்ச்சி மையத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆட்பற்றாக்குறையை சமாளித்து, ஆயுதங்களின் மூலம் எதிரிகளை சமாளிக்கலாம் என்று ஜப்பான் அரசு நம்புகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தை வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
நம்பியே இருக்க முடியாது
இது தொடர்பாக டோக்கியோ பல்கலையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை பேராசிரியர் கஸுடோ சுஷுகி கூறுகையில், 'ஜப்பான் அரசு தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள பல விஷயங்களை செய்ய இருக்கிறது. அமெரிக்கா எங்களின் முக்கியமான நட்புநாடு. எதிர்காலத்தில் அமெரிக்கா எங்களுக்கு உதவாமல் கூட போகலாம். எனவே, எங்களை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான செயல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எப்போதும், அமெரிக்காவை நம்பியே இருக்க முடியாது, எனக் கூறினார்.

