ADDED : ஜூன் 03, 2024 04:23 AM

பீஜிங் : நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், நிலவின் தென்துருவத்தில் நேற்று அதிகாலை தரையிறங்கியது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நிலவில் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை தொடர்கின்றன. அந்த வரிசையில், சீனாவின் சாங்இ விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2020ல் அனுப்பப்பட்ட சாங்இ - 5 விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங்இ - 6 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.
இது, சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் பூமியின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அந்த விண்கலம் வரும் 25ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030ல் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.