ADDED : செப் 13, 2024 02:16 AM
கொழும்பு, நம் அண்டை நாடான இலங்கையில் வரும் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அருரா குமார திசநாயக ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 1ம் தேதி முடிவு செய்தது.
அந்த கூட்டணியின் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. கூட்டத்தின் போது ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்த அக்கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் கூறுகையில், ''இந்த விஷயத்தில் அப்படியொரு முடிவு எதுவும் எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் அரியநேத்திரனை தான் கட்சி ஆதரிக்கும்,'' என, கூறியுள்ளார்.
கட்சியின் மற்றொரு தலைவரான மாவை சேனாதிராஜா கூறுகையில், ''வவுனியாவில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான இறுதி முடிவு நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
''அதே நேரத்தில், பிரேமதாசாவை ஆதரிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு இறுதியானது; மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமே இல்லை,'' என, தெரிவித்துள்ளார்.