கமலா ஹாரிஸ் தேர்வு சரியான முடிவு: பில் கிளிண்டன் பாராட்டு
கமலா ஹாரிஸ் தேர்வு சரியான முடிவு: பில் கிளிண்டன் பாராட்டு
ADDED : ஆக 22, 2024 01:31 PM

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான் என முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்தார்.
அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
எதிரிகளை குறைத்து மதிப்பிடாதீங்க
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான். 2024ம் ஆண்டில் தெளிவான தேர்வு கிடைத்துள்ளது என தோன்றுகிறது. அதிபராக டொனால்டு டிரம்ப் இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தினார். அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்க கமலா ஹாரிஸ் தன்னை அர்பணித்தார். எதிரிகளை ஜனநாயக கட்சியினர் குறைத்து மதிப்பிட வேண்டாம். கமலா ஹாரிசுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் ஓட்டளித்தால், மக்களின் கனவுகளை நிறைவேற்ற பணியாற்றுவார்.
மகிழ்ச்சி
எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும். துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். கமலா ஹாரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.