ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,
ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,
ADDED : செப் 15, 2024 11:59 AM
இஸ்லாமாபாத்:
அரசுக்கு எதிராக மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான சிறப்பு துாதரை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.
அமெரிக்கா - தலிபான் தோஹா ஒப்பந்தத்துக்கு பின், கடந்த 2020ல் அப்போதைய பாக்., பிரதமர் இம்ரான் கானால், ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு துாதர் பதவி உருவாக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ல் தலிபான் படைகளால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2023ல் ஆப்கன் நாட்டிற்கான சிறப்பு துாதுவராக ஆசிப் துரானியை பாகிஸ்தான் அரசு நியமித்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை தீர்க்கும் விதமாக அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தாலிபன் பாகிஸ்தான் அமைப்புக்கு, தலிபான்கள் அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறிய பாகிஸ்தான், அது தொடர்பான கண்டனத்தை பதிவு செய்தது.
ஆனால், அவர்கள் அதை மறுத்தனர். இருப்பினும், தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பினரின் தாக்குதல் கடந்த இரு ஆண்டுகளாக பாகிஸ்தானில் அதிகரித்தது.
இந்த விவகாரத்தில், பாக்., அரசின் ஆலோசனைகளை புறக்கணித்து, சொந்தமாக முடிவுகள் எடுத்ததாக ஆசிப் துரானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஆப்கனிஸ்தான் நாட்டுக்கான சிறப்பு துாதர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், ஆசிப் அதை மறுத்துள்ளார். ''சிறப்பு துாதராக பணியாற்ற இன்னும் இரண்டு வருட கால அவகாசம் உள்ளது. இருப்பினும், சொந்த வேலை காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகிறேன்,'' என, அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு முன் இந்த பதவியில் இருந்த முகமது சாதிக்கும், தன் பதவியை கடந்த 2023ல் ராஜினாமா செய்தார்.