UPDATED : பிப் 22, 2025 11:35 PM
ADDED : பிப் 22, 2025 11:30 PM

புதுடில்லி : இந்தியாவில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக என்று சொல்லி கோடிக்கணக்கில் வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் புயலை கிளப்பிய நிலையில், வங்கதேசத்துக்கு வழங்கிய நிதியைத்தான் டிரம்ப் தவறாக கூறிவிட்டார் என செய்திகள் வெளியாகி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால், இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்துவது கேள்விக்குறி ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும், அரசின் வீண் செலவுகளை குறைக்க, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
ஆள் குறைப்பு
அந்த அமைப்பு பல துறைகளில் ஆள் குறைப்பு செய்யவும், சில துறைகளை மூடவும் பரிந்துரை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு அமெரிக்க அரசின் பல துறைகள் வாயிலாக வழங்கப்படும் நிதியை நிறுத்தவும் சிபாரிசு செய்தது.
அதன்படி, இந்திய மக்களிடம் ஓட்டளிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க பிரசாரம் செய்வதற்காக வழங்கப்பட்ட 182 கோடி ரூபாயை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.
அப்போது அவர், 'இந்தியாவிடம் ஏகப்பட்ட பணம் இருக்கும்போது, அமெரிக்க அரசு எதற்காக இந்த தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
'ஒருவேளை மோடிக்கு பதில் வேறு யாராவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பைடன் அரசு வழங்கி இருக்கலாம்' என்று கொளுத்தி போட்டார்.
உடனே டில்லி அரசியலில் அது பற்றிக் கொண்டது. 'இந்திய தேர்தலில் அந்நிய தலையீடு உள்ளதாக நாங்கள் சொல்லி வந்தது உண்மை என நிரூபணமாகி விட்டது. அந்த பணம் முழுதும் காங்கிரசுக்கு போயிருக்கிறது' என்று பா.ஜ., தலைவர்கள் கூறினர்.
காங்கிரஸ் அதை நிராகரித்தது. 'இது டிரம்ப், மோடி என்ற இரண்டு நண்பர்களுக்குள் நடக்கும் விளையாட்டு' என்று கிண்டல் செய்தது. எனினும், 'இது சீரியசான விஷயம்; விசாரித்தே ஆக வேண்டும்' என்று மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.
காரசார விவாதம்
இந்த நிலையில் தான், மேற்படி பணம் வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்டதே தவிர இந்தியாவுக்கு அல்ல என்ற செய்தி வெளியானது. டிரம்ப் நிறைய பொய் சொல்வதாக அமெரிக்க பத்திரிகைகள் கூறிவருகின்றன.
இந்த நிதி விஷயத்திலும் அவ்வாறு திரித்து கூறுகிறாரா அல்லது தவறாக தரப்பட்ட தகவலை உண்மை என்று சித்தரிக்க பார்க்கிறாரா என்று, சமூக ஊடகத்தில் காரசார விவாதம் நடந்தது.
டிரம்ப் விடாப்பிடியாக தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பிரச்னை குறித்து நேற்று கருத்து தெரிவித்தார். 'வங்கதேசத்துக்கு 251 கோடி ரூபாய், அங்கு அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டது.
'இதைத் தவிர, இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டது' என அவர் கூறினார்.
இவ்வாறு குழப்பமான தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்துவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
அதிபருக்கு தெரியாதா!
இந்தியாவுக்கு நிதி உதவி வழங்கியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மூன்றாவது நாளாக உறுதிப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். தன் நாடு எதற்கு நிதி ஒதுக்கியது என்பது அந்த நாட்டின் அதிபருக்கு தெரியாமலா இருக்கும்? ஆனால், அவரைவிட தங்களுக்கே அதிகம் தெரியும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமித் மாள்வியா, மூத்த தலைவர், பா.ஜ.,