காங்., - எம்.பி., ராகுலுக்கு அமெரிக்காவில் வரவேற்பு
காங்., - எம்.பி., ராகுலுக்கு அமெரிக்காவில் வரவேற்பு
ADDED : செப் 09, 2024 03:52 AM

ஹூஸ்டன் : காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் மூன்று நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான பின், முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். டெக்சாசின் டல்லாஸ் சர்வதேச விமான நிலையம் வந்த அவரை, வெளிநாடு வாழ் காங்கிரஸ் அணியின் நிர்வாகிகள், இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.
இந்த பயணத்தின் போது, அமெரிக்க அரசின் முக்கிய தலைவர்களை தனிப்பட்ட முறையில் ராகுல் சந்தித்து பேசுவார் என வெளிநாடுவாழ் காங்கிரஸ் பிரிவின் தலைவர் சாம் பிட்ராடோ தெரிவித்தார்.
மேலும், ஜார்ஜ்டவுன் பல்கலை மற்றும் டெக்சாஸ் பல்கலையின் மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார்.
தன் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்காவின் டல்லாஸில் இந்தியர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. 'இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டுஉள்ளார்.