டிரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரான்; அம்பலப்படுத்தியது அமெரிக்கா!
டிரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரான்; அம்பலப்படுத்தியது அமெரிக்கா!
ADDED : நவ 09, 2024 08:38 AM

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். பிரசார களத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசாரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது பறந்த வந்த தோட்டா, டிரம்ப் காதில் மேல்பகுதியை உரசிச் செல்ல ஒரு கணம் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயினர். அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர் தப்பினார். இந்த சம்பவம், அமெரிக்க வாக்காளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் துணை ராணுவ குழுவின் ஒரு உறுப்பினர் டிரம்பை கண்காணித்து, கொல்ல முயற்சி செய்துள்ளார். ஈரானை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல முயற்சி செய்துள்ளனர். இது குறித்து இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கா மக்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்ந்த முயற்சி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நீண்ட கால எதிரியாக இருந்து வரும் ஈரான், கடந்த முறை டிரம்ப் ஆட்சியின் போது பல நெருக்கடிகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்கா வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறியதாவது: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஈரான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரான் அரசால் இயக்கப்படும் சிலர் அமெரிக்கா மண்ணிலும் வெளிநாட்டிலும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் உட்பட எங்கள் குடிமக்களை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் . இவ்வாறு அவர் கூறினார்.