UPDATED : மே 06, 2024 06:38 PM
ADDED : மே 05, 2024 11:50 PM
சாவ் பவ்லோ: பிரேசிலின் தென்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 68க்கும் அதிகமானோர் மாயமாகிஉள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழை பெய்து வருகிறது. இந்நாட்டின் தென்பகுதியில் உள்ள ரியோ கிரான்டே டு சுல் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.
இங்குள்ள பென்டோ கான்கால்ஸ் மற்றும் கொடிபோரா நகரங்கள் இடையே அமைந்துள்ள நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் சப்ளை செய்யும் அணை பகுதியளவு உடைந்து நீர் வெளியேறியது. இதனால் டாகுரி நதி பள்ளத்தாக்கில் உள்ள லஜிடோ மற்றும் எஸ்டெர்லா நகரங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.
பெலிஸ் நகரத்தில் பாயும் நதியில் பாய்ந்தோடும் வெள்ளம் காரணமாக லின்ஹாநோவா நகருடன் இணைப்பை ஏற்படுத்தும் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி மாகாணம் முழுதும் 39 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் மாயமாகியுள்ளனர் என மாநில பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரேசிலின் தென்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 24,000த்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்சாரம், தொலைதொடர்பு சேவை, குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இன்டெர்நெட் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் இயங்காததால் தங்களை பற்றிய தகவல்களை உறவினர்களுக்கு தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.