ADDED : ஜூன் 03, 2024 04:18 AM
கொழும்பு : இலங்கையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 15 பேர் பலியாகினர். 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
நம் அண்டை நாடான இலங்கையில், நேற்று பருவமழை பெய்தது. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பலத்த காற்று, மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில், 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதையடுத்து இலங்கை ராணுவத்தினர் படகுகள் உதவியுடன், வீடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர். விமானப்படையின் மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
இன்றும் கனமழை தொடரும் என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக வெள்ளம் பாதித்த பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.