மூன்கேக்கில் இருந்த மனிதப்பல்... சூப்பர் மார்க்கெட் மீது போலீஸில் புகார்
மூன்கேக்கில் இருந்த மனிதப்பல்... சூப்பர் மார்க்கெட் மீது போலீஸில் புகார்
ADDED : செப் 15, 2024 06:52 PM

ஜியாங்ஷு: மூன்கேக்கை சாப்பிட முயன்ற பெண், அதில் மனிதப்பல் இருந்ததால் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
சீனாவின் ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள ஷங்ஷு எனும் பகுதியில் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சாம்ஸ் கிளப் எனும் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு இறைச்சியுடன் கூடிய மூன்கேக்கை, பெண் ஒருவர் சுமார் ரூ.300 கொடுத்து வாங்கி சாப்பிட முயன்றுள்ளார்.
அப்போது, அந்தக் கேக்கில் மனிதனின் பல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அது தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பல் கிடையாது என்பதை உறுதி செய்த அவர், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.
மூன் கேக் தயாரிப்பில் எந்த தூய்மை குறைபாடும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக சாம்ஸ் கிளப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு புஜியான் மாகாணத்தில் உள்ள சாம்ஸ் கிளப் கிளையில் வாங்கப்பட்ட ஸ்விஸ் ரோலில் செயற்கை பற்கள் இருந்ததாக எழுந்த புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.