அமெரிக்காவில் நேபாள மாணவியை சுட்டுக்கொன்ற இந்தியர் கைது
அமெரிக்காவில் நேபாள மாணவியை சுட்டுக்கொன்ற இந்தியர் கைது
ADDED : ஆக 31, 2024 11:43 PM

டெக்சாஸ்: அமெரிக்காவில் நேபாள நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவியை, இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் முனா பாண்டே, 21. இவர், கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கல்லுாரியில் படிக்க சென்றார். இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி படித்து வந்தார்.
கடந்த மாதம் 26ம் தேதி முனா பாண்டே, அவரது வீட்டில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்ததை பார்த்த அவரது நண்பர்கள், போலீசில் புகார் அளித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் முனாவின் வீட்டில் இருந்து வெளியேறியதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் போலீசார் வெளியிட்ட நிலையில், வடமேற்கு ஹூஸ்டனில் உள்ள ஒரு இடத்தில் அவர் பதுங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணை யில், அந்த நபரின் பெயர் பாபி சிங் ஷா, 52, என்பதும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கைதான பாபி சிங் ஷாவிடம் விசாரணை நடத்தியதில், முனாவின் வீட்டில் கொள்ளையடிக்க சென்றபோது, அவரை சுட்டுக்கொன்றதாக குறிப்பிட்டார். இதையடுத்து, பாபி சிங் ஷாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.