அமெரிக்காவில் இந்திய அரசியல் மாநாடு: இந்திய பிரமுகர்கள் பங்கேற்பு
அமெரிக்காவில் இந்திய அரசியல் மாநாடு: இந்திய பிரமுகர்கள் பங்கேற்பு
UPDATED : ஜூலை 16, 2024 04:53 PM
ADDED : ஜூலை 16, 2024 07:41 AM

வாஷிங்டன்: அமெரிக்கா மிசெளரி மாகாணம் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களின் கூட்டமைப்பு என்.ஆர்.ஜ.வி.ஏ., மாநாட்டில் ஆந்திர முன்னாள் எம்.எல்.ஏ., அம்பிகா கிருஷ்ணா மற்றும் தெலுங்கானா மாநில பாஜ., மூத்த தலைவர் தேவகி வாசுதேவ ராவ், தமிழக பா.ஜ மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இந்திய அரசியல் மற்றும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. அனைவரையும் பூங்கொத்து கொடுத்து மாநாட்டாளர்கள் வரவேற்றனர்.
மாநாடு குறித்து எஸ்.ஜி.சூர்யா கூறியதாவது: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கூட்டமைப்பில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்தால் 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களை அழைத்து மாநில வாரியாக மாநாடு நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு சிக்காகோ மாநிலத்தில் அரசியல் மாநாடு நடந்தது. இந்த ஆண்டு செயின்ட் லூயிஸ் மாநிலத்தில் நடந்தது. இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து நான் பேசினேன். குறிப்பாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றது வரலாற்று சிறப்புமிக்கது என்பதை எடுத்துரைத்தேன்.
பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறாமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கினேன். பத்து ஆண்டு கால ஆட்சிக்குப் பின் 240 தொகுதிகளை வெற்றி பெற்றது பெரிய விஷயம். கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளை பெற்று ஆட்சியை இழந்தது என்பதையும் நான் விளக்கி பேசினேன். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், உலக நாடுகளில் இந்தியா வல்லரசாக மாறும் என்பதையும் மாநாட்டில் எடுத்துரைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.