ADDED : செப் 17, 2024 02:35 AM

டொரான்டோ,கனடாவில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞர், நீரில் மூழ்கி பலியானார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனீத். இவரது சகோதரர், வட அமெரிக்க நாடான கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தின் டொரான்டோ நகரில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, பிரனீத் கடந்த 2022ல் கனடா சென்றார். தன் சகோதரருடன் தங்கி வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் பிரனீத், தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக, அங்குள்ள ஏரியில் நேற்று முன்தினம் படகு சவாரி சென்றார். அப்போது குளிப்பதற்காக ஏரியில் குதித்த பிரனீத், நீண்டநேரமாகியும் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினருடன் சென்று பிரனீத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 10 மணி நேரத்திற்கும் மேலாக தேடி, அவரது உடலை மீட்டனர். பிறந்த நாளிலேயே பிரனீத் உயிரிழந்தது, அவரது நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பிரனீத் இறந்த செய்தியை கேட்டு, தெலுங்கானாவில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தங்கள் மகனின் உடலை, இந்தியாவிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.