2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐ.நா.,
2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐ.நா.,
ADDED : ஜூலை 13, 2024 01:37 AM

நியூயார்க்: 'இந்தியாவின் மக்கள் தொகை 2060ம் ஆண்டு துவக்கத்தில் 170 கோடியாக உயர்ந்து, பின் 12 சதவீதம் குறையும்' என, ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை உயர்வு தொடர்பான ஐ.நா., அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன் விபரம்:
உலக மக்கள் தொகை அடுத்த 50 - 60 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உயர்ந்து, 2080ம் ஆண்டு மத்தியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது 820 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2080ல் 1,030 கோடியாக உயரும். உச்சத்தை தொட்டதும் படிப்படியாகக் குறைந்து இந்த நுாற்றாண்டின் இறுதியில் 1,020 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியா 2,100 வரை அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
தற்போது 145 கோடி யாக உள்ள இந்திய மக்கள் தொகை, 2054ல் 170 கோடியாக உயர்ந்து உச்சம் தொடும். அதன்பின் படிப்படியாகக் குறைந்து 2100ல் 150 கோடியாக இருக்கும். பூமியின் அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்த நுாற்றாண்டு முழுதும் இந்தியா திகழும்.
தற்போது 141 கோடியாக உள்ள சீன மக்கள் தொகை 2054ல் 121 கோடியாக குறையும்.
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், இந்த நுாற்றாண்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகை இழப்பை அந்நாடு சந்திக்கும். வரும், 2100ல் சீன மக்கள் தொகையில் 79 கோடி சரிவு ஏற்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.