ADDED : மே 24, 2024 05:35 AM

துபாய் : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல், அவரது சொந்த ஊரான மஷ்ஹாதில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்காசிய நாடான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, 63, கடந்த, 19ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அஜர்பைஜானுக்கு சென்றார். அவருடன், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், மூத்த அரசு அதிகாரிகள் சென்றனர்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு, அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டனர். வரும் வழியில் மலைப்பகுதியில் மோதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், அதிபர் இப்ராஹிம் ரைசி, அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
தலைநகர் டெஹ்ரானில், அதிபர் இப்ராஹிம் ரைசி, அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. நம் நாட்டின் சார்பில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், நேற்று காலை பிர்ஜண்டு நகரில் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இப்ராஹிம் ரைசியின் சொந்த ஊரான மஷ்ஹாத் நகருக்கு விமானம் வாயிலாக அவரது உடல் எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து, இமாம் ரெசா என்ற இடத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் தான், ஷியா இஸ்லாத்தின் 8வது இமாம் அடக்கம் செய்யப்பட்டார்.
இப்பகுதி நீண்ட காலமாக ஷியா புனித யாத்திரையுடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, மறைந்த அதிபருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.