ADDED : மே 24, 2024 05:36 AM
கொழும்பு : தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பயங்கரவாதிகள், இந்தியாவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களின் கூட்டாளி ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு, இண்டிகோ விமானத்தில் சமீபத்தில் வந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்களுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., உடன் தொடர்பு இருப்பதும், நான்கு பேரும் நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று, கொழும்பில் உள்ள மாளிகாவத்தை என்ற இடத்தில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் பிரபல போதைப் பொருள் வியாபாரியின் மகன் என்பது தெரிய வந்தது.