லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்... தீவிரம்! பலி எண்ணிக்கை 558 ஆக அதிகரிப்பு
லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்... தீவிரம்! பலி எண்ணிக்கை 558 ஆக அதிகரிப்பு
ADDED : செப் 25, 2024 12:58 AM

பெய்ரூட் : தன் அண்டை நாடான லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. இதில், 558 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,835 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், 'பேஜர்' எனப்படும் தகவல் அனுப்ப உதவும் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், சமீபத்தில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.
இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
தடுப்பு நடவடிக்கை
இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று முன்தினம் தீவிர தாக்குதலில் இறங்கியது.
இந்த தாக்குதல்களில், 5--0 குழந்தைகள், 94 பெண்கள் உட்பட, 558 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 1,835 பேர் காயம்அடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவம், லெபனானில் நேற்றும் தன் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில், ஹிஸ்புல்லாவின் இடங்களில் இந்த தாக்குதல் நடந்தது.
''இது லெபனானுக்கு எதிரான போர் அல்ல. எங்கள் நாட்டை பாதுகாக்க நடத்தப்படும் தடுப்பு நடவடிக்கையே. லெபனானின் தென் பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளை ஒழிப்பதே நோக்கம்,'' என, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
தேவைப்பட்டால், லெபனானின் தென் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், 250 ஏவுகணைகள் உட்பட, அக்., இறுதியில் இருந்து, 9,000 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா செலுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
லெபனானின் தென் பகுதியில், ஹிஸ்புல்லாவின், 1,300 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் கணிப்பின்படி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளிடம், 1.50 லட்சம் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இருக்கலாம் என, கூறப்படுகிறது.
லெபனானில், 1975 - 1990களில் நடந்த உள்நாட்டு போருக்குப் பின், ஒரே நாளில் அதிக பலி ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
மோசமான தாக்குதல்
மேலும், 2006 முதல் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே நடக்கும் போரில் மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ல், லெபனானின் பெய்ரூட்டில் உள்ள அமோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில், 218 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.