ADDED : ஆக 24, 2024 02:02 AM

சிகாகோ : அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தற்போதைய துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், 59, முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில், நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78,அதிபர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் களம் காண்கிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த மாநாட்டில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் இறுதிநாளான நேற்று, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இதன் வாயிலாக, அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதையடுத்து மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:ஒவ்வொரு அமெரிக்கரின் சார்பாகவும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி ஏற்றுக் கொள்கிறேன். ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த என் தந்தை ஜேஸ்பர் ஹாரிஸ் ஒரு துணிச்சல்காரர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த என் தாய் ஷ்யாமளா கோபாலன், தைரியமானவர். 'அநீதியை தடுக்க, நாம் புகார் மட்டுமே சொல்லக்கூடாது. அதை எதிர்த்து நாம் போராட வேண்டும்' என, கற்றுக்கொடுத்துள்ளார்.
எனவே, என் வாழ்நாள் முழுதும் மக்கள் தான் எனக்கு எஜமானர்கள். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் ஒற்றுமைக்காகவும், எதிர்காலத்துக்காகவும் போராடுவேன்.
இவ்வாறு கமலா பேசினார்.