டிரம்ப் உடனான விவாதத்துக்கு பின் கூடியது கமலா ஹாரிஸ் மவுசு
டிரம்ப் உடனான விவாதத்துக்கு பின் கூடியது கமலா ஹாரிஸ் மவுசு
ADDED : செப் 13, 2024 02:17 AM

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சிக்குப் பின், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசின் மவுசு கூடியுள்ளதாக, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக இருந்தது. கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த விவாதத்தின்போது, டொனால்டு டிரம்பின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் அவர் திணறினார். கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததால், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், கட்சியின் வேட்பாளரானார்.
டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே, முதல் விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த விவாத நிகழ்ச்சி, மக்களிடையே எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பாக, சி.என்.என்., தொலைக்காட்சி உடனடி கருத்துக் கணிப்பை நடத்தியது.
விவாத நிகழ்ச்சிக்கு முன்பாக, அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, 39 சதவீதம் பேர் கூறியிருந்தனர். அதே நேரத்தில் விவாத நிகழ்ச்சிக்குப் பின், 45 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் வென்றதாக, 63 சதவீதம் பேரும், டிரம்ப் வென்றதாக, 37 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இதில் இருந்து, அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் முன்னேறியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
விவாத நிகழ்ச்சிக்குப் பின் கருத்து தெரிவித்தவர்களில், 44 சதவீதம் பேர், தங்களுடைய பிரச்னைகளை கமலா ஹாரிஸ் புரிந்துள்ளார் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில், 40 சதவீதம் பேர் டிரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
விவாதத்துக்கு முன் கருத்து தெரிவித்தவர்களில், 43 சதவீதம் பேர் டொனால்டு டிரம்ப் தங்களுடைய பிரச்னைகளை சரியாக புரிந்துள்ளார் என்று கூறியிருந்தனர். கமலா ஹாரிசுக்கு, 39 சதவீத ஆதரவே இருந்தது.
மக்களிடையே கமலா ஹாரிசுக்கு மவுசு கூடியுள்ளபோதும், பொருளாதார விஷயத்தில் சிறப்பாக கையாளக் கூடியவர் யார் என்ற கேள்விக்கு, 55 சதவீதம் பேர் டிரம்புக்கும், 35 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும் சாதகமாக பதிலளித்துள்ளனர்.