UPDATED : ஆக 23, 2024 11:29 PM
ADDED : ஆக 23, 2024 11:24 PM

கீவ், ஆக. 24- உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுடன் நடக்கும் போர் குறித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது' என, சுட்டிக்காட்டினார்.
சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, அதில் இருந்து பல நாடுகள் உருவாகின. அதில் மிகப் பெரும் பகுதி ரஷ்யா என்று மாறியது. இதைத் தவிர பல நாடுகளும் உருவாகின. இவ்வாறு ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உக்ரைனாக மாறியது.
கடந்த 1991, அக்., 24ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது. ஆனாலும், அதை தன்னுடன் இணைப்பதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டது.
இதன்படி, 2014ல் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, உக்ரைனின் கிரீமியா உள்ளிட்ட சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது.
டான்பாஸ் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போர், 2022 வரை அடிக்கடி மோதல்களாகவே இருந்து வந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போரைத் துவங்கியது; அது தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
முந்தைய, எட்டு ஆண்டுகள் நடந்த போரைவிட, தற்போது போர் மிகவும் தீவிரமாக உள்ளது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.
சீனா, கொரியா உள்ளிட்டவை ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள், எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகின்றன.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, எண்ணெய், அணு மின்சக்தி, ராணுவம் உட்பட பல துறைகளில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது.
![]() |
கொரோனா தொற்றின்போது, வளைகுடா நாடுகளை மட்டுமே எண்ணெய் தேவைக்காக சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், உக்ரைனுடனான போர் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யா பல சலுகைகளுடன் எண்ணெய் விற்பனைக்கு முன்வந்தது. இதை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது.
இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது. அதே நேரத்தில், போரை நிறுத்தி, அமைதிக்கான பேச்சைத் துவங்கும்படி, இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
கடந்த ஜூலை மாதம், ரஷ்யாவுக்கு சென்றபோதும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார்.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், சமரசம் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும் என, பல நாடுகள் கூறின. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் சமநிலையில் நட்பு வைத்துள்ளதால், இந்தியா மீது அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்தன.
போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடான போலந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து, 10 மணி நேர ரயில் பயணம் செய்து, உக்ரைனின் கீவ் நகரை நேற்று காலை சென்றடைந்தார்.
![]() |
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். கட்டித் தழுவி அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். உணர்ச்சி பெருக்கில் இருந்த ஜெலன்ஸ்கியின் தோளில் கைகளை போட்டு, பிரதமர் மோடி தேற்றினார்.
இதைத் தொடர்ந்து, இருவரும், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசினர். குறிப்பாக இந்தப் பேச்சில், ரஷ்யா போர் குறித்தே அதிக நேரம் பேசப்பட்டது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை என்பதை மோடி சுட்டிக் காட்டினார். அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
தூதரக பேச்சு மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும் என்பதை முன்மொழிந்தார். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பார்க்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுக்கு கோடிட்டு காட்டினார்.
அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், தீர்வை நோக்கியதாகவும் இருந்தது என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். புடினுடனான தன் சமீபத்தில் சந்திப்பின்போது பேசிய விபரங்களையும் ஜெலன்ஸ்கியுடன் மோடி பகிர்ந்து கொண்டார். மோடியின் இந்தப் பயணம் ஒரு வரலாற்று சிறப்பிக்கது என, ஜெய்சங்கர் இறுதியாக குறிப்பிட்டார்.