'இந்தியாவில் சித்ரவதை செய்வர்' மும்பை தாக்குதல் பயங்கரவாதி வாதம்
'இந்தியாவில் சித்ரவதை செய்வர்' மும்பை தாக்குதல் பயங்கரவாதி வாதம்
ADDED : மார் 07, 2025 02:35 AM

வாஷிங்டன், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, தன் கடைசி வாய்ப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
'இந்தியாவில் தன்னை சித்ரவதை செய்வர் என்பதால், நாடு கடத்தக்கூடாது' என, மனுவில் அவர் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவர், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
இவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் அவரது சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அப்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து, எந்த நேரத்திலும் அவர் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் கடைசி வாய்ப்பாக, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
'இந்தியாவில், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடக்கின்றன. நான் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் என்பதால், இந்திய சிறையில் சித்ரவதை செய்வர்.
'ஏற்கனவே பல உடல் உபாதைகள் உள்ள நிலையில், சிறையில் அந்த சித்ரவதைகளை அனுபவிக்க முடியாமல் விரைவில் இறந்து விடுவேன். அதனால், இந்தியாவுக்கு நாடு கடத்தக்கூடாது' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.