நேபாள பிரதமர் பதவி விலக புதிய கூட்டணி வலியுறுத்தல்
நேபாள பிரதமர் பதவி விலக புதிய கூட்டணி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 02:32 AM

காத்மாண்டு:புதிய கூட்டணி அரசு ஆட்சி அமைப்பதற்கு வசதியாக, பதவியில் இருந்து விலகும்படி, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டாவுக்கு, புதிய கூட்டணி வலியுறுத்திஉள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் குழப்பம் சர்வ சாதாரணமாகிவிட்டது. கடந்த, 16 ஆண்டுகளில், 13 அரசுகள் அமைந்துள்ளன. இருக்கும் மூன்று பெரிய கட்சிகள் மாறி மாறி கூட்டணியை மாற்றி வருகின்றன.
மொத்தம், 275 உறுப்பினர்கள் உள்ள பார்லிமென்டில் ஷேக் பகதுார் துபா தலைமையிலான நேபாள காங்கிரசுக்கு, 89 உறுப்பினர்கள் உள்ளனர். கே.பி.சர்மா ஒலியின், சி.பி.என்., -- யு.எம்.எல்., கட்சிக்கு, 76 எம்.பி.,க்கள் உள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சிக்கு, 32 எம்.பி.,க்கள் உள்ளனர்.
கடந்த, ஒன்றரை ஆண்டுகளில், நான்கு முறை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த பிரசண்டா, மூன்று முறை தப்பினார்.
தற்போது, பிரசண்டா மற்றும் சர்மா ஒலி கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், ஷேர் பகதுார் துபா மற்றும் சர்மா ஒலி கைகோர்த்துள்ளனர். புதிய அரசை அமைக்க இரு கட்சிகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், பதவி விலக மறுத்துள்ள பிரசண்டா, நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார். இவ்வாறு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால், அதை நிரூபிக்க, 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.
புதிய அரசு அமையும் வகையில், பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி, பிரசண்டாவுக்கு நேபாள காங்கிரஸ் மற்றும் சி.பி.என்., - யு.எம்.எல்., கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, இந்த இரு கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.