பிரிட்டனில் பார்லி., தேர்தல் பதவியை தக்க வைப்பாரா ரிஷி?
பிரிட்டனில் பார்லி., தேர்தல் பதவியை தக்க வைப்பாரா ரிஷி?
ADDED : ஜூலை 05, 2024 02:18 AM

லண்டன், பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், பிரதமர் பதவியை தக்க வைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டுக்கான தேர்தல் நேற்று துவங்கியது. பதவிக்காலம் முடிய அவகாசம் இருந்த நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக். இவரது மனைவி அக் ஷதா, 'இன்போசிஸ்' நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி மற்றும் எம்.பி.,யாக உள்ள சமூக ஆர்வலர் சுதா மூர்த்தியின் மகள்.
கடந்த 2016ல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகு வதற்கான மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதன்படி, 2020ல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. கடந்த 2019ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், கன்சர்வேடிவ் எனப்படும் பழமைவாத கட்சி அபார வெற்றி பெற்றது.
போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால், 2022ல் அவருடைய சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினர். இதைத் தொடர்ந்து, லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், பிரிட்டன் வரலாற்றில் மிகவும் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் இவர் தான். இதைத் தொடர்ந்து, 2022ல் ரிஷி சுனக் பிரதமரானார்.
பார்லிமென்டின் 650 எம்.பி., பதவிக்கான தேர்தலில், ஆட்சியைப் பிடிக்க 326 பேரின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில், 4.65 கோடி மக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் தெரியவரும்.
கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இந்த தேர்தல், அந்தக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உணர்த்துவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்கிற்கு மிகப்பெரும் சவாலாக இருப்பவர், லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர். இவருடைய தலைமையில், தொழிலாளர் கட்சி வலுப்பெற்று வந்துள்ளது. அதனால், தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது. இருப்பினும், கருத்துக்கணிப்புகள் கெயர் ஸ்டார்மருக்கு சாதகமாக உள்ளன.