UPDATED : ஜூலை 08, 2024 10:51 PM
ADDED : ஜூலை 08, 2024 05:43 PM

மாஸ்கோ: ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு, மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (ஜூலை 08) பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கை கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர்.
இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கிறார். நாளை (ஜூலை 9) ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அவர் நாளை ஆஸ்திரியாவுக்கு செல்ல உள்ளார்.
முன்னதாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்தியா - ரஷ்யா உடனான உறவு கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.