கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சிறுவனை சுட்டு கொன்ற போலீசார்
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சிறுவனை சுட்டு கொன்ற போலீசார்
ADDED : மே 06, 2024 06:39 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், ஒருவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவனை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில், நேற்று முன்தினம் இரவு, 16 வயது சிறுவன் ஒருவன் தகராறில் ஈடுபட்டான். ஹார்டுவேர் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த சண்டையில், அங்கிருந்த ஒரு நபரை சிறுவன் கத்தியால் குத்தினான். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுவனை பிடிக்க முயன்றனர்.
அப்போது, போலீசாரை நோக்கி கத்தியால் குத்த வந்த சிறுவனை, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு காயங்களுடன் போராடிய சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஆஸி., போலீசார் கூறுகையில், 'சம்பவ இடத்தில் வன்முறையில் ஈடுபட போவதாக, முந்தைய நாள் இரவே சிறுவன் ஒருவன் போன் செய்து தகவல் தெரிவித்தான்.
'அந்த இடத்துக்கு நாங்கள் செல்வதற்கு முன்பே, கத்திக்குத்து நடந்துவிட்டது. அவனை பிடிக்க முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவன் இறந்துவிட்டான். அந்த சிறுவன் ஆன்லைன் வாயிலாக பயங்கரவாத செயல்கள் குறித்து பயிற்சி எடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளான். இருப்பினும், விசாரணையின் முடிவில் அனைத்து விபரங்களும் தெரியவரும்' என தெரிவித்தனர்.
கடந்த மாதம் 15ம் தேதி சிட்னியில் உள்ள தேவாலயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன், அங்கிருந்த பாதிரியாரை கத்தியால் குத்தினான். இது தொடர்பாக சிறுவன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக, ஆஸி.,யில் சிறுவர் பயங்கரவாதம் அதிகரித்து வரும் சூழலில், “இது அமைதியை விரும்பும் தேசம். இங்கு வன்முறை, பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.