ADDED : மார் 01, 2025 01:28 AM

சியோல்: தென் கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பி.டி.எஸ்., இசைக்குழுவின் பாடகர் ஜின்னுக்கு, அவரது அனுமதியின்றி முத்தம் தந்த ஜப்பான் நாட்டு பெண்ணை போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவில் ஏழு இளைஞர்களால், 2013ல் துவங்கப்பட்ட இசைக்குழு பி.டி.எஸ்., இவர்களின் பாடல்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை, 'பி.டி.எஸ்., ஆர்மி' என அழைத்துக் கொள்கின்றனர்.
தென் கொரியாவில், 18 வயது நிரம்பிய அனைவரும், 18 மாத கட்டாய ராணுவ பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பி.டி.எஸ்., இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள், 30 வயதுக்குள் கட்டாய பயிற்சி எடுக்க தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடகர் ஜின், 32, கடந்த ஆண்டு ஜூனில் இந்த ராணுவ பயிற்சியை நிறைவு செய்தார். அந்நிகழ்ச்சியையும், பி.டி.எஸ்.,ன் 11ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடும் வகையில் சியோலில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, 50 வயது பெண், ஜின்னை கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் தந்தார். ஜின் இதை ரசிக்கவில்லை. இதுகுறித்து, போலீசில் சிலர் ஆன்லைன் வாயிலாக புகார் தந்தனர்.
அதை விசாரித்த சியோல் போலீசார், முத்தம் தந்த பெண்ணை அடையாளம் கண்டுபிடித்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அவர் மீது, பாலியல் தொந்தரவு வழக்கு பதிந்துள்ளனர். அவரை, விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.