ADDED : ஆக 22, 2024 02:34 AM

புதுடில்லி, உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வந்து, அங்கு அமைதி திரும்புவது குறித்த இந்தியாவின் எண்ணத்தை, விருப்பத்தை, அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பகிர காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். டில்லியில் இருந்து போலந்துக்கு நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி, அந்த நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆன்த்ரீஜ் டூடாவை சந்தித்து பேச உள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில், இந்தியா நடுநிலை வகித்து வருகிறது; பிரச்னைக்கு பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற மோடி, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது, உக்ரைனில் அமைதி திரும்புவது குறித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில், போலந்து மற்றும் உக்ரைனுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
டில்லியில் இருந்து புறப்படும் முன், நேற்று வெளியிட்ட செய்தியில் மோடி கூறியுள்ளதாவது:
இந்தியா மற்றும் போலந்துக்கு இடையேயான துாதரக உறவுகளின், 70வது ஆண்டை குறிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
மத்திய ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் போலந்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும்.
உக்ரைன் 1991ல் விடுதலை பெற்ற பின், அங்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீர்வு காண்பதற்கான நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்.
மிகச் சிறந்த நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில், இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.