இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் அமெரிக்காவில் 2,000 பேர் கைது
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் அமெரிக்காவில் 2,000 பேர் கைது
ADDED : மே 04, 2024 11:17 PM

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைகளில், இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக, 2,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், 2023 அக்., முதல் மோதல் நடந்து வருகிறது.
இதில் காசாவில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 35,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் அதை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகளில், கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் முக்கிய பல்கலைகள், கல்லுாரிகள் போராட்ட களமாக மாறி உள்ளன.
பல்கலைகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்துவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில், 30 பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் தற்போது போராட்டம் தீவிரம்அடைந்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் அதிகளவில் பல்கலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புளோரிடா உள்ளிட்ட சில இடங்களில், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
பெரும்பாலான பல்கலைகளில் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு விட்டன.
இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் காரணமாக இதுவரை, 2,100க்கும் அதிகமானோர் கைது செய்யயப்பட்டுள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் விசாரணையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.