ADDED : மார் 22, 2024 02:02 AM

மியுலாபோ,இந்தோனேஷியா அருகே ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு விபத்தில் சிக்கியதை அடுத்து, அதிலிருந்து, 60க்கும் மேற்பட்டோர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.
நம் அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள முகாம்களில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கடல்வழியாக இந்தோனேஷியா, மலே�யா உள்ளிட்ட நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அவ்வாறு சட்டவிரோதமாக செல்பவர்கள் உரிய பாதுகாப்பு இன்றி செல்வதால், சில சமயங்களில் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுடன் சென்ற படகு ஒன்று இந்தோனேஷியாவின் வடக்கில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது.
கோலா பூபான் கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் படகு கவிழ்ந்ததில், அதில் பயணித்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
எத்தனை பேர் படகில் சென்றனர் என்ற விபரம் தெரியாத நிலையில், 60க்கும் மேற்பட்டோர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.
பெரும் அழுகுரல் மற்றும் மனித ஓலங்களின் நடுவே, இந்தோனேஷியா கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

