ADDED : பிப் 14, 2025 11:46 PM

கீவ்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள உலை மீது, ரஷ்யா, ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு, அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
விபத்து
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை மூன்றாம் ஆண்டை எட்டவுள்ள நிலையில், அதை நிறுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன.
அதேசமயம், ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சூழலில், உக்ரைனின் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் பணிகள் கைவிடப்பட்ட நான்காவது அணு உலை மீது, ரஷ்யா நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி உள்ளது.
சக்தி வாய்ந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் சமூக வலைதளத்தில் கூறியதாவது:
அணு உலையில் உள்ள கதிர்வீச்சுகளில் இருந்து உலகை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்தது. அப்பகுதியில் ஏற்பட்ட தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது.
கவலை அளிக்கிறது
தற்போதைய சூழலில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. இருப்பினும், நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த நுாற்றாண்டிலும், அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியே கசிந்துவிடாத வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பு பலத்த சேதமடைந்தது.
இதுபோன்ற இடங்களிலும் கூட ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது கவலை அளிக்கிறது.
முழு உலகிற்கும் இது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல். இதன் வாயிலாக ரஷ்யா போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இல்லை என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
'இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. செர்னோபில் ஆலைக்கு உள்ளேயும், வெளியேயும் கதிர்வீச்சின் அளவு இயல்பாகவும், நிலையாகவும் உள்ளது' என, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு நடத்திய நிலையில், அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஆனால், அணு உலை மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என, ரஷ்யா மறுத்துள்ளது.