ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்பு; புடினிடம் பேசிய அமெரிக்க அதிபர்
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்பு; புடினிடம் பேசிய அமெரிக்க அதிபர்
ADDED : மார் 15, 2025 06:45 AM

வாஷிங்டன்: 'உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இறுதியாக முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துஉள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர், மூன்று ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்காவின் புதிய அதிபராக, கடந்த ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் முடிவு செய்துஉள்ளார்.
இது தொடர்பாக இரு நாடுகளின் அதிபர்களிடம் அவர் பேசினார். போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக, சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தொலைபேசியில் பேசினார்.
இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவு:
ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினேன். இந்த உரையாடல், நல்ல முறையில் இருந்தது. மேலும், இந்த கொடூரமான, ரத்தக்களரி போர் இறுதியாக முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
ஆனால் இந்நேரத்தில், ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இது மிகவும் கவலைக்குரியது. அவர்களின் உயிர்களை காப்பாற்றும்படி, ரஷ்ய அதிபர் புடினிடம் உறுதிப்பட வலியுறுத்தி உள்ளேன்.
உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டால், அது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பயங்கர படுகொலையாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.