பாக்.,கில் பயங்கரவாதிகள் அட்டூழியம்:: பயணியர் உட்பட 33 பேர் சுட்டுக்கொலை
பாக்.,கில் பயங்கரவாதிகள் அட்டூழியம்:: பயணியர் உட்பட 33 பேர் சுட்டுக்கொலை
ADDED : ஆக 27, 2024 12:36 AM

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சை வழிமறித்து, அதில் பயணித்த 23 பயணியரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மற்றொரு தாக்குதலில், நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பணியாற்றும் அந்நாட்டைச் சேர்ந்த பஞ்சாபிகள் மற்றும் சிந்திகள் மீது, அங்குள்ள பலோச் விடுதலைப் படை மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் சமீபகாலமாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
பலுசிஸ்தானில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் பகுதி வளங்களை அபகரிப்பதுடன், அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தை உள்ளூர் மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதில்லை எனக்கூறி அந்நிறுவனங்கள் மீதும், அங்கு பணியாற்றும் நபர்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள், இந்த அமைப்பினரை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதம் ஏந்திய நபர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசா கேல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற பஸ்சை வழிமறித்து, அதில் இருந்த நபர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, அவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிட்டனர்.
இதில், பஞ்சாபியர் அல்லது சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து, அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 23 பேரும், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர, அங்குள்ள அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றையும் பயங்கரவாதிகள் தீ வைத்ததுடன், சூறையாடவும் செய்தனர்.
இதேபோல் பலுசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தில், நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் நீடிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, பலோச் பொதுமக்கள், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த அமைப்பு கோரியிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபோன்ற பயங்கரவாத செயல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.