இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் காரை மோதச் செய்து நாசவேலை
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் காரை மோதச் செய்து நாசவேலை
ADDED : பிப் 28, 2025 12:49 AM

டெல் அவிவ், இஸ்ரேலில் சாலையில் சென்றவர்கள் மீது வாகனம் மோதியதில் ஏழு பேர் காயமடைந்த நிலையில், இது பயங்கரவாதிகளின் நாசவேலையோ என, பாதுகாப்பு துறை சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஹைபா நகர் அமைந்துள்ளது. இங்குள்ள கர்கூர் சந்திப்பில் சாலையோரம் நேற்று நடந்து சென்ற நபர்கள் மீது வாகனம் மோதியது. இதில், பாதசாரிகள் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மேற்கொண்டு வாகனம் செல்ல விடாமல் தடுப்புகளை போட்டு தடுத்தனர். வாகனத்தை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.
காயமடைந்த ஏழு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில், எங்கிருந்தோ வந்த வாகனம் ஒன்று, நடந்து சென்ற பாதசாரிகள் மீது திடீரென மோதியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட நபர், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜெனின், 53, என்பதும், இஸ்ரேலில் அவர் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இஸ்ரேல் பெண்ணை திருமணம் செய்த அவர், சட்டவிரோதமாக இஸ்ரேலில் வசித்ததாக கூறப்படுகிறது. இவருக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.